இந்து முஸ்லீம். குடி அரசு - துணைத் தலையங்கம் - 19.04.1931 

Rate this item
(0 votes)

இந்தியாவின் உண்மை விடுதலைக்கு இந்து முஸ்லீம் ஒற்றுமை அவசிய மென்று அடிக்கடி கூறப்படுவதோடு சுமார் 20,30 வருஷகாலமாக அதற்காக பல பெரியார்களும் பாடுபடுவதாகத் தெரிவிக்கப்படுகின்றது. இப்போது திரு. காந்தியவர்களே இவ்வேவையில் முனைந்திருக்கிறார்.. 

இதே காந்தியவர்களால் கொஞ்ச காலத்திற்குமுன் இந்தியாவின் விடுதலைக்கு தீண்டாமை ஒழிய வேண்டியது முதன்மையானகாரியம் என்றும் தீண்டாமை ஒழியாவிட்டால் சுயராஜ்யமே வராது என்றும் சொல்லப்பட்டது. ஆனால் இப்போது அந்த பிரச்சினை வெகு சுலபத்தில் தீர்ந்து போய் விட்டது. அதாவது “சுயராஜ்யம் வந்தால் தீண்டாமை தானாகவே ஒழிந்து போகும்” என்று அவராலேயே சொல்லப்பட்டாய் விட்டது. 

ஏனெனில் சுயராஜ்யம் வந்தால் மதத்தில் யாரும் பிரவேசிக்கக்கூடாது என்கின்ற நிபந்தனை காந்தி சுயராஜ்யத்தில் முக்கியமான நிபந்தனை யாதலால் “மதத்தில் தீண்டாமை இருப்பதால் அதைப்பற்றி பேசுவது மத விரோதம்” என்று ஒரு உத்திரவு போட்டு விட்டால் தீண்டாமை விஷயம் ஒரே பேச்சில் தானாகவே முடிந்துவிடும் என்று அவர் எண்ணியிருக்கலாம். ஆகை யால் இப்போது தீண்டாமையைப் பற்றி யாரும் கவலைப்பட வேண்டிய தில்லை 

அன்றியும் திரு.காந்தியின் சுயராஜ்யம் "இப்போது தீண்டாமை ஒழியாமலே வரவும் போகின்றது. ஏனெனில் தீண்டாதார் எனப்படுபவர்களில் தீண்டாமை ஒழியாமல் சுயராஜ்யம் வர இணங்கமாட்டோம் என்று சொல்லுவதற்கு அறிவும் வீரமுமுள்ள ஆசாமிகள் இல்லை. ஆதலால் பாத நடுநிலைமை" சுயராஜ்யமாய் தாண்டவமாடுகின்றது. 

ஆனால் இந்து முஸ்லீம் விஷயம் அப்படியில்லை. ஏனெனில் லக்னோ ஒப்பந்தத்திற்கு பிறகும் வகுப்புவாரி தனித்தொகுதி பிரதிநிதித் துவத்திற்கு பிறகும் அவர்களுக்கு முஸ்லீம்களுக்கு ஒருவாறு மனிதத் தன்மை ஏற்பட்டுவிட்டது. அவர்களை சுலபமாய் இனி யாரும் ஏய்த்துவிட முடியாது. இந்து முஸ்லீம் ஒற்றுமை எவ்வளவு வாயளவு பேசினாலும் காரியத்தில் இந்துக்கள் எப்படி ஒரு சிறிதும் விட்டுக் கொடுக்காமல் முஸ்லீம்களை ஏமாற்றப் பார்க்கின்றார்களோ அது போலவே, முஸ்லீம்களும், முஸ்லீம் இந்து ஒற்றுமையை வாயளவில் எவ்வளவு பேசினாலும் காரியத்தில் சிறிதும் விட்டுக் கொடுக்காமல் இருந்துவரும் தன்மையை அடைந்து விட்டார்கள். 

இந்தத்தன்மையையுடைய இருவரையும் நாம் குற்றம் சொல்ல வரவில்லை. ஏனெனில் இருகூட்டத்தாரும் தங்களின் இரு மதத்தின் உண்மை யான தன்மைப்படியே இருவரும் நடந்து கொள்ளுகின்றார்கள். ஆகையால் மேற்படி இரு மதத்தின் பிரதானமும் தளர்த்தப்படும் வரை இந்தியா மாத்திர மல்லாமல் இவர்களையுடைய எந்த தேசமும் இப்படித்தான் நடந்து கொள்ள முடியும். சுலபத்தில் ஒற்றுமையைக்காணமுடியாது. 

உதாரணமாக கொஞ்ச காலத்திற்கு முன்பு காலஞ் சென்ற லாலா லஜபதிராய் அவர்கள் "மகமதியரல்லாதாரை கொல்லவேண்டும் என்கின்ற வசனம் குரானில் இருக்கும்வரை இந்து முஸ்லீம் ஒற்றுமை சாத்தியப்படாது” என்று "சுயராஜ்யா”வில் எழுதியிருந்தது யாவருக்கும் ஞாபகமிருக்கும். 

மற்றும் இன்னும் அதுபோலவே இஸ்லாம் மதத்தை விர்த்திசெய்ய கத்தி, ஈட்டி, பலாத்காரம் ஆகியவைகளை உபயோகித்து யுத்தம் செய்யலாம் என்கின்ற தாத்பரியங்களும் அதில் இருந்து வருவதும் யாவரும் அறிந்ததே. 

அதுபோலவே “ஆரியரல்லாதவர்களெல்லாம் மிலேச்சர்கள்” +ஆரியரல்லாதவர்கள் பாஷை மிலேச்சபாஷை. ஆரியரல்லாதவர்களை எல்லாம் கொல்ல வேண்டும். அவர்கள் அழிக்கப்படவேண்டும். அவர்கள் பூமிக்கு சாரம்” என்று “இந்துக்கள்" வேதத்தில் இருந்து வருவதும், சைவனல்லாதவன் கழுவேற்றப்பட்டதாய் புராணங்களில் இருந்து வருவதும் வேதம் என்பது என்ன, புராணம் என்பது என்ன என்பதையும், இந்து தர்மம் என்பது என்ன என்பதையும் அறிந்தவர்கள் எல்லாம் நன்றாய்த் தெரிந்திருப்பார்கள். 

இஸ்ஸாம் தர்மத்தில் இஸ்லாம் அல்லாதவன் காபர் அதாவது நாஸ்திகன் அழிக்கத்தகுந்தவன்" என்று இருப்பதும் இந்து அகராதியில் மகமதியன் என்றால் ராக்ஷதன். அசுரன் என்றும் மிலேச்சன் என்றும் இருப் பதும் யாவரும் அறிந்ததேயாகும். அன்றியும், இவைகளை இருதிறத்தாரும் அறிந்திருந்தும் இந்த விஷயங்களில் எவ்வித மாறுதலும் செய்யாமலும் அதுமாத்திரமல்லாமல் எவ்வித மாறுதலும் செய்யக்கூடாது என்கின்ற நிபந்தனையை சுயராஜியத் திட்டத்தில் ஒரு முக்கிய நிபந்தனையாகவும் வைத்துக் கொண்டு இந்து முஸ்லீம் ஒற்றுமை, ஒற்றுமை என்று கூப்பாடு போட்டால் அக்கூப்பாடுகள் வேஷக் கூப்பாடா? அல்லது ஏய்ப்புக் கூப்பாடா? அல்லது வாஸ்தவத்திலேயே போடும் ஒரு உண்மைக் கூப்பாடா? என்பதைப் பொது மக்கள் உணர்ந்து பார்க்க வேண்டுமாய்க் கோருகின்றோம். 

நாம் இந்தப்படி எழுதுவது சில தேசீயப் பிழைப்புக்காரர்களுக்கு பிடிக்காததுபோல் காணப்படலாம். அவர்கள் இருகூட்டாத்தாரிடையும் துவேஷ முண்டாக்கவும் வகுப்புக் கலவரமுண்டாக்கவும் பிரசாரம் செய்வ தாக நம்மைப் பற்றி விஷமப் பிரசாரமும் செய்யலாம். ஆனாலும், அதைப் பற்றி நாம் சிறிதும் கவலைப்படப் போவதில்லை. ஆனால் நாம் எழுதுவது உண்மையா இல்லையா என்று பரிசோதித்துப்பார்க்க வேண்டுமென்றுதான் கவலைப்படுகின்றோம். 

இம்மாதிரியான இரண்டு மதத்தையும்தான் இருகூட்டத்தார்களும் வளர்க்க வேண்டுமென்றும், இருமதத்தாரும் அவரவர்கள் மதத்திற்குக் கட்டுப்பட்டு நடக்கவேண்டும் என்றும் இந்தியாவின் ஏக தலைவரான திரு.காந்தியவர்கள் கூறுகின்றார்கள். இது இந்துக்களிலும் முஸ்லீம்களிலும் உள்ள மத பக்திக்காரர்களைத் திருப்தி படுத்தி திரு, காந்தியை மகாத்மா என்று ஒப்புக்கொள்ளவும் உதவும். ஆனால் இது இருசமூகத்தினுடையவும் ஒற்றுமைக்கு சாத்தியப்படக் கூடியதா என்று யோசித்துப் பார்க்கும்படி பொதுஜனங்களைக் கேட்டுக் கொள்ளுகின்றோம் 

இரு சமூகத்திலுள்ள வாலிபர்களும் ஒன்று கூடி இரு மதங்களிலு முள்ள வேஷத்தையும், துவேஷத்தையும் ஒன்றுக்கொன்று அடிப்படையா யுள்ள மாறுபாட்டையும் ஒழிக்க முன்வந்து துவேஷமும் வேஷமும் மாறுபாடும் கற்பிக்கும் பாகம் எதிலிருந்தாலும் அவை யார் சொன்னதாக இருந்தாலும் தைரியமாய் எடுத்தெரிந்துவிட்டு ஒற்றுமைக்கான திட்டங் களைப் புகுத்தி இருவரும் தங்களை மனிதத் தன்மை மதக்காரர்கள் (கொள்கைக்காரர்கள்) என்று சொல்லிக் கொண்டு புரப்பட்டால் இந்தியா மாத்திரமல்லாமல், இந்து முஸ்லீம்கள் மாத்திரமல்லாமல் உலகமெல்லாம் உலகத்திலுள்ள சமூகமெல்லாம் இந்தக் கொள்கையின்கீழ் அன்புத் தன்மை யோடு சகோதர வாஞ்சையோடு ஆட்சி புரியப்படவாம், அதில்லாமல் அவரவர்கள் மதத்தைப் பலப்படுத்திக்கொண்டு அவைகளுக்குச் சிறிதும் டாங்கமோ மாறுபாடோ இல்லாமல் இந்து முஸ்லீம் ஒற்றுமை ஏற்படுத்தலாம் என்பது சிறிதும் பயன் படாததாகும். அந்தப்படி ஏதாவது ஒருசமயம் ஒற்றுமை ஏற்பட்டு விட்டதாக யாராவது சொல்லுவதானாலும் சிலருடைய தனிப்பட்ட நன்மைக்கு உதவுமேயல்லாமல் இந்திய மக்களின் பொது நன்மைக்குச் சிறிதும் உதவாது என்று உறுதியாய்ச் சொல்லுவோம். 

இந்து முஸ்லீம் ஒற்றுமைக்காக கூட்டப்பட்ட முஸ்லீம் மகாநாட்டுத் தீர்மானங்களைப் பார்த்தால் ஒற்றுமையின் தத்துவம் எவ்வளவிலிருக்கிறது 

என்பது விளங்கும் அவையாவன - 

தீர்மானங்கள் 

1"இந்துக்கள் வீண் ஆதிக்கம் செலுத்த விரும்பியதால் காசி, ஆக்ரா, மிர்ஜாப்பூர், கான்பூர் முதலிய பல இடங்களில் வகுப்புக்கலவரங்கள் ஏற்பட்டதைக்குறித்து வருந்துகிறோம். காங்கிரஸ் வகுப்பு மனஸ்தாபங்களில் தனது போலி சாத்வீகக் கொள்கையை கைவிட்டுவிட்டது என்றே நாங்கள் கருதுகின்றோம். பெரும்பான்மையான சமூகத்தார் இவ்வாறு இனியும் மனோபாவம் கொண்டிருந்தால் உள்நாட்டுக் கலகம் விளைவது திண்ணம் இந்திய சர்க்காரும், பிரிட்டிஷ் சர்க்காரும் இந்திய நிலைமை யைச் சமாளிக்க திட்டமான கொள்கையின்றி, காங்கிரஸ் வேண்டுகோளுக்கே செவிசாய்த்து வருவதால் துரதிருஷ்டம் கொண்ட இந்நாடே அழிந்துபோகும் நிலைமை உண்டாகி விடும் என்று எச்சரிக்கின்றோம்." 

2"பார்லிமெண்டிலிருந்து அதிகாரங்கள் மன்னர்கள் கைக்கு மாற வேண்டுமென்றும். ஐக்கிய ஆட்சி முறையில் சேரும் எல்லோருடைய முழுச்சம்மதமுமின்றி எந்த விஷயத்தையும் ஐக்கிய சர்க்கார் நிர்வாகத்தில் விட்டு விடக்கூடாதென்றும் இம்மகாநாடு அபிப்பிராயப்படுகின்றது. தற்பொழுதுள்ள நிலையில் தனித்தொகுதிகளே வேண்டும் ஐக்கிய சர்க்கார் சட்டசபையில் நூற்றுக்கு 33/ வீதம் முஸ்லீம்களுக்கு ஸ்தானம் வேண்டும்." 

  1. “இந்தியமன்னர்கள் லண்டனுக்குச் செல்லும் பொழுது கப்ப லிலேயே, முஸ்லீம்களைத் தலையெடுக்க வொட்டாமற் செய்யும் வண்ணம் சதியாலோசனை செய்து கொண்டனர். இந்நிலையில், நிம்மதியாயும், அபாயமின்றியும் வாழவல்ல இரண்டொரு மாகாணங்களை நாம் பிரத்தியே கமாக வைத்துக்கொள்ளுவது தான் நமக்கிருக்கும் ஒரேவழி. இந்துக்களடங் கிய தலைமை சர்க்காரிடத்திலே ராணுவத்தை விட்டுவைக்க நாம் ஒரு நாளும் சகிக்க மாட்டோம். ராணுவத்தில் முஸ்லீம்களுக்கு பெரிய உத்தி யோகம் ஒன்றும் கொடுக்கமாட்டார்கள். இதுவும் தவிர, கான்பூர் போன்ற கலக சமயங்களில் முஸ்லீம்களை இந்த ராணுவம் பாதுகாக்காது. காங்கிரஸ் பிரிட்டிஷாருடன் போர்புரிந்து, அதிகாரத்தை பெற்றதாயின், சற்றும் தயங்காது சகல தியாகங்களையும் செய்து, காங்கிரசுடன் நாம் போர் புரிவோம்" என்பதாகும். 

முஸ்லீம் சமூகத் தலைவரான மௌலானா சௌகத் அலி அவர்கள் பேசி இருப்பதாவது: 

"முஸ்லிம்கள் திரு.காந்தியிடமிருந்து நியாயத்தை எதிர்பார்க்க முடியாது. லட்சம் காந்தியையும் நான் ஒருவனே எதிர்த்துப் போராட முடியும்” என்று பேசியிருக்கிறார். 

மற்றும் அவர் திரு. காந்தி முஸ்லிம்களில் சில ஏமாளிகளை வைத்துக் கொண்டு வாயாடுகின்றார்கள். இந்து முஸ்லீம்கலவரத்திற்கு திரு. காந்தியே காரணம். அதோடு மாத்திரமல்லாமல் திரு.காந்தி முஸ்லீம்களுக் குள்ளாகவே ஒருவரை ஒருவர் வெட்டி கொள்ளும்படி செய்கிறார்" என்று பேசி இருக்கிறார். 

இந்த நிலையில் இந்து முஸ்லீம் சமரசம் செப்பிடுவித்தையா அல்லது முடியக்கூடியாதா? என்று யோசித்துப் பாருங்கள்.. வகுப்புகளையும் மதத்தையும் காப்பாற்றிக் கொண்டு தாங்கள் தந்திரசாலிகளாகவும் அதிக எண்ணிக்கை உள்ளவர்களாகவும் இருக்கின்றோம் என்கின்ற காரணத்திற் காக வகுப்பு வாரி மத வாரிபிரநிதித்துவம் கூடாது என்று சொல்லும் வரை வகுப்பு ஒற்றுமையும் மத ஒற்றுமையும் எதிர்பார்ப்பது முட்டாள் தன மாகவே முடியும் என்பதோடு எந்த 'தேசியமும்' எந்த 'அஹிம்சை 'யும் இனி பொதுமக்களை ஏமாற்ற முடியாது என்பது உறுதி.

குடி அரசு - துணைத் தலையங்கம் - 19.04.1931

Read 26 times

நன்றி

வாசிப்பு இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ள பெரியாரின் பொன்மொழிகள் புலவர் நன்னன் அவர்களின் "பெரியார் கணினி " நூலிலிருந்து எடுத்தாளப்பட்டுள்ளது. புலவர் நன்னன் அவர்களுக்கு எங்களது  நன்றியை  தெரிவித்துக்கொள்கிறோம்.  

வாசிப்பு
vaasippu.com

+91 99622 02869
support@vaasippu.com

Follow Us On

 

No Rights Reserved. All for Public Use.